Advertisement Contact

சுமந்திரன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும்,

குற்றச்சாட்டுக்களை அடுக்கும் தவராசா ன் தமிழரசுக் கட்சியில் இணைந்து செயல்படுவது தமிழ் தேசியத்தின் மீது நான் கொண்ட பற்றினால் மட்டுமே என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஆபிரஹாம் மதியாபரணம் சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என தலைப்பிட்டு தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில்,

கடந்த பத்து ஆண்டுகளாக கட்சியில் பல பதவிகள் எனக்கு வழங்கப்பட்டன, எந்தப் பதவிக்காகவோ அல்லது கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்றோ அல்லது தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல வேண்டுமென்றோ இன்றுவரை கட்சித் தலைமைத்துவத்திடம் எந்த வேண்டுகோள்களையும நான் முன் வைத்தவனல்ல வைக்கப்போகின்றவனுமல்ல.

அத்துடன், 10 வருடங்களாக தலைமையகத்தின் வேண்டுகோளுக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைய கொழும்புக் கிளையை சொந்த நிதியிலேயே நடாத்தி வருகின்றேன்.

கட்சியிலிருந்து எந்த சூழ்நிலையிலும் ஒரு சதமேனும் நிதி உதவி பெற்றவனல்ல, ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பை பாதிக்கும். செயல்பாடுகளை கூறவேண்டிய தார்மீக கடமையும் கடப்பாடும் எனக்குண்டு என்பதனாலேயே இந்த வேண்டுகோளை ­­­­முன்வைக்கின்றேன்.

2020ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்தமைக்கு முக்கிய காரணகர்த்தாவாக செயல்பட்டவர் திரு.ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன். கட்சியின் கட்டுக்கோப்பையும் மீறி பொறுப்பற்ற முறையில் தான்தோன்றித் தனமாக தன்னிச்சையாக எடுத்த முடிவுகளினாலும் செயற்பாடுகளினாலும் தமிழ் தேசிய உணர்வாளர்களின் மனதைப் புண்படுத்தி, பல்லாயிரக்கணக்கான வாக்குகளை விசேடமாக தமிழரசுக்கட்சி இழந்தமைக்கு ஆப்பிரகாம் மதியாபரணம் சுமந்திரன் முக்கிய காரணகர்தா ஆவார்.

திரு.ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும். இவர் கட்சியிலிருந்து நீக்கப்படாவிடின் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்ட தமிழரின் உரிமைகளுக்கான அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் அர்த்தமிழந்து போவதோடு தாயகத் தேசிய கொள்கைகளும் தமிழரசுக்கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெறுமதியிழந்து அழிந்தே போகும் நிலை நிச்சயம் உருவாகும் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

கட்சியைப் தொடர்ந்து பின்னடைவுக்கு இட்டுச் சென்று வீழ்ச்சிப் பாதையில் நகர்த்திச் சென்று கொண்டிருக்கும் திரு சுமந்திரன் அவர்களை கட்சியிலிருந்து உடனடியாக நீக்காதுவிட்டால் அது பாரிய வரலாற்றுத் தவறாக அமையும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

(1) திரு. M.A சுமந்திரன்.

திரு. M.A. சுமந்திரன். அவர்களை கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு பல காரணங்களான

(1) 2015ம் ஆண்டின் நல்லாட்சியில் அரசமைப்பு விவகாரம்

(2) தமிழ் தேசிய கொள்கை நீக்கல் அரசியல்.

(3) ஆயுதப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்கள்

(5) இனப்படுகொலை- சர்வதேச விசாரணை முடிந்து விட்டது

(6) ஜெனிவா விவகாரங்களை கையான்ட முறை

(7) தேசிய அரசியலுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை தமிழ் தேசிய அரசியலுக்கு வழங்;காமை (கடும் அரசஆதரவு)

(8) அரசியல் கைதிகள். காணாமல் ஆக்கப்ட்டோர் விவகாரம்

(1-8) ஒன்றிலிருந்து எட்டுவரை குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் திரு.ஆ.யு. சுமந்திரனின் செயல் பாட்டை விபரமாக இங்கே குறிப்பிடுவதை கட்சியின் எதிர்கால நலன்காரணமாக தவிர்த்துள்ளேன்

மேலே குறிப்பிடப்பட்ட 8 விடயங்கள் ;உட்பட கீழே விபரமாக பதியப்பட்டுள்ள 12 விடயங்களுமான் சாட்சியங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளின்றி தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் திரு. M.A சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்கப்படலாம்.

(1) வேட்பாளர்கள் தெரிவில்

(அ) வேட்பாளர் தெரிவில் நியமனக்குளு உறுப்பினர் என்ற வகையில் தமிழரக்கட்சியின் வாலிபர் முன்னணி. மகளிர் முன்னணிக்கு முன்னுரிமை முக்கியத்துவம் வழங்கி வேட்பாளர்களை தெரிவு செய்யம்படி எனது வேண்டுகோளை முன்வைத்த போதிலும் நீண்ட காலமாக கட்சிச் செயல்பாடுகளில் அர்ப்பணிப்போடு செயல்பட்ட வாலிபர் முன்னணி மகளிர் முன்னணியை புறந்தள்ளி திரு. M.A சுமந்திரன் கட்சி நலனைப் பாராது தனது தெரிவாக விலாசமற்ற தமிழ் மக்களுக்கு யாரென்றே தெரியாத கட்சியின் உறுப்பினரல்லாத புது முகங்களான அம்பிகா சற்குணநாதன், நளினி ரட்ணராஜா ஆகிய இருவரது தெரிவிலும் யாப்பு விதிகளுக்கு மாறாக தன்னலம் கருதி கூடுதல் அக்கறை செலுத்தினார்.

நளினி ரட்ணராஜாவை திரு. ஆப்பிரகாம் சுமந்திரன் வேட்பாளராக தெரிவு செய்வதற்கு எடுத்த கடும் முயற்சி கட்சியின் மற்றைய வேட்பாளர்களினதும் அங்கத்தவர்களினதும் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. அம்பிகா சற்குணநாதன்,வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரங்களும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்ய திகதி குறிப்பிப்பட்ட நாளில் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியவரை திரு M.A சுமந்திரன் இறுதி நாளன்று தேசிய பட்டியலில் உள்வாங்கினார்.

(ஆ) மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மங்களேஸ்வரி சங்கர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவது தொடர்பில், கருத்துகள் நியமனக் குழுவில் முன்வைக்கப்பட்ட பொழுது இந்த விண்ணப்பதாரி சகல தகுதிகளையும் கொண்டவர் என்பதோடு வாக்காளப் பெருமக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றிபெறக் கூடிய வேட்பாளராகையால் அவருக்கு நியமனம் வழங்கும்படி நான் நியமனக் குழுக்கூட்டத்தில் தெரிவித்த போதிலும் சுமந்திரன் மங்களேஸ்வரி சங்கருக்கு நியமனம் வழங்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

கட்சி நலன் பாராமல் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகச் சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கருக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படுவது சுமந்திரனின் தலையீட்டினால் நிராகரிக்கப்பட்டது.

மங்களேஸ்வரி சங்கருக்கு வாய்ப்பு அளிதிருந்தால் ஒரு பெண் பிரதிநிதித்துவம்; கிடைத்திருக்கும் என்பதுடன் மட்டக்களப்பிலிருந்து மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள்

(இ) தமிழ் தேசிய கூட்டமைப்பினால் மங்களேஸ்வரி சங்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர் மங்களேஸ்வரி சங்கர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு 15,000 மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தனக்கு நெருக்கமானவர் என்பதற்காக எந்தப் பொது மகனும் அறியாத தெரியாத நளினி ரட்ணராஜாவுக்கு நியமனம் வழங்குவதற்காக மக்கள் அபிமானம் பெற்ற மங்களேஸ்வரி சங்கரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இச் செயல்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கணிசமான வாக்குச் சரிவை ஏற்படுத்தியதோடு ஒரு பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்தது.