Advertisement Contact

கங்குலி புத்திசாலி மனிதர் அவர் இதை நடக்க விடமாட்டார்! ஐ.சி.சி-யின் புதிய பிளானை சாடும் அக்தர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, பி.சி.சி.ஐ தலைவராகப் பதவியேற்ற பின்னர், பல்வேறு புதிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். இந்திய அணி, தொடர்ச்சியாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் ஆடாமல் இருந்துவந்த நிலையில்... அணி நிர்வாகத்திடம் பேசி, கொல்கத்தாவில் இந்திய அணியின் முதலாவது பகலிரவு ஆட்டத்தை நடத்தி மாஸ் காட்டினார்.

அடுத்தகட்டமாக, நான்கு நாடுகள் கிரிக்கெட் என்னும் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளார் கங்குலி. ஐசிசி-யின் FTP எனப்படும் எதிர்கால திட்டத்தில் இதைக் கொண்டுவரவும் முயற்சிகள் நடக்கின்றன. ஐசிசி-யின் அனுமதி கிடைக்கும்பட்சத்தில், 2021-ம் ஆண்டில் டாப் 4 அணிகள் மோதும் தொடரை இந்தியாவில் நடத்த கங்குலி ஆர்வமாக உள்ளார்.

கங்குலியின் இந்தத் திட்டத்துக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்து, இணைந்துள்ளன. இந்தத் திட்டத்துக்கு சில அணிகள் ஆதரவு தெரிவித்தாலும், கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய 3 வாரியங்கள், தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே இந்தத் தொடரை நடத்தத் திட்டமிடுவதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்கு கங்குலி நீண்ட விளக்கம் கொடுத்தாலும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

இதற்கிடையே, நான்கு நாள் டெஸ்ட் போட்டியை அமல்படுத்த உள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வணிக ரீதியாக ஐசிசி யோசித்து டெஸ்ட் கிரிக்கெட்டை நசுக்கப் பார்க்கிறது என்று ஏற்கெனவே சச்சின், கோலி, பாண்டிங் உள்ளிட்ட வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தரும் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ``நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான யோசனை ஒரு குப்பை யோசனை. இதில் யாரும் அதில் ஆர்வம் காட்டக்கூடாது.

பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி ஒரு புத்திசாலி மனிதர். அவர் இதை நடக்க விடமாட்டார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விடமாட்டார். பி.சி.சி.ஐ-யின் ஒப்புதல் இல்லாமல் ஐ.சி.சி இந்த நான்கு நாள் டெஸ்ட்டை செயல்படுத்த முடியாது. பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.