Advertisement Contact

சுவிஸ் ரயிலில் மீட்கப்பட்ட தங்கம்: உரிமையாளர் யார் என அடையாளம் தெரிந்தது,

சுவிட்சர்லாந்தில் வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிலோ கணக்கிலான தங்கக்கட்டிகளை விட்டுச் சென்ற நபர் யார் என்ற அடையாளம் 8 மாதங்களுக்கு பின்னர் தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி லூசெர்ன் வந்தடைந்த வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்ற நிலையில் கிலோ கணக்கிலான தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டன.

அதன் மதிப்பு சுமார் 180,000 பிராங்குகள் என தெரியவந்தது. இதன் உரிமையாளரை தேடும் பணியை லூசெர்ன் மண்டல நிர்வாகம் முடுக்கி விட்டது.

இச்செய்தி சுவிஸ் மட்டுமின்றி சர்வதேச பத்திரிகைகள் பல முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன.

கடந்த 8 மாதங்களாக இந்த தங்கக்கட்டிகளின் உரிமையாளர் குறித்த தகவல் ஏதுமின்றி மர்மமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், ஜேர்மன் இணைய செய்தி பக்கம் ஒன்று இந்த தங்கம் தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

குறித்த தங்கக்கட்டிகள் அனைத்தும் கானா நாட்டில் செயல்பட்டுவரும் ஒரு சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமானது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் சம்பவத்தன்று லூசெர்ன் நகரத்திற்கு சென்றதாகவும், ரயிலில் தூங்கியதால் தங்கத்தை தவறவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால், அந்த நிறுவனம் இதை ஏற்க மறுத்ததுடன், அந்த ஊழியரே தங்கத்தை திருடியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

உண்மையில் அந்த தங்கக்கட்டிகளானது ஜெனீவாவில் செயல்பட்டுவரும் ஒரு நகைக்கடைக்காரரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இருப்பினும், லூசெர்ன் மண்டல நிர்வாகத்திடம் இதுவரை எவரும் தங்கக்கட்டிகள் தொடர்பில் உரிமை கோரவில்லை என்றே தெரியவந்துள்ளது.