Advertisement Contact

சோதனைச்சாவடியிலேயே தாலி கட்டிய மணமக்கள்,

ஊரடங்கு விதிமுறைகளை மீறி மணமக்களை பயணம் செய்ய பொலிசார் அனுமதிக்காததையடுத்து, சோதனைச்சாவடியிலேயே மணமக்கள் தாலி கட்டி, மாலை மாற்றிக் கொண்டனர்.

தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி சுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்த ரத்னம் மகன் பிரசாந்த். இவருக்கும் கேரள மாநிலம் கோட்டயம் காரப்புழா பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகள் காயத்ரி என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு வாளார்டி என்ற இடத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், மணமகன் ஆன்லைன் மூலம் கேரளா செல்ல விண்ணப்பித்தார். நேற்றுவரை அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. மணமகனுக்கு இ.பாஸ் அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல், மணமகள் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தமிழக கேரள எல்லையான குமுளி சோதனைச்சாவடிக்குத் திருமண உடையுடன் மணமகன் மற்றும் மணமகள் வந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இருமாநில போலீஸ் விசாரித்தனர். விவரத்தை இருதரப்பினரும் தெரியப்படுத்தி, மாரியம்மன் கோயில் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இ.பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என கேரள போலீசார் மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து மணமகன் குடும்பத்தார் குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷிடம் பேசினர். அவரது யோசனையின்படி முகூர்த்த நேரத்திற்குள் சோதனைச்சாவடி அருகே திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து இரு குடும்ப உறுப்பினர்களும் பேசி, ஒருமனதாக முடிவெடுத்து, மணமகன் பிரசாந்த், மணமகள் காயத்ரிக்குத் தாலி கட்டி, இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.

எல்லைப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இருமாநிலக் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து இருவருக்கும் இ-பாஸ் இல்லாத காரணத்தால், அவரவர் தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இச்சம்பவத்தால் மணமக்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்தாலும், மணமக்கள் இருவரும் வருத்தத்தோடு விடைபெற்றுக் கொண்டனர்.