Advertisement Contact

குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவம்,

குழந்தைகளுக்கான நோய்களில் பெரும்பாலானவை கை மருத்துவத்திலேயே குணப்படுத்தப் படுகின்றன. குழந்தை மருத்துவத்தில் தாய்ப்பால் மிகவும் சிறப்பிற்கு உரியதாகும். குழந்தை பிறந்து ஓராண்டிற்குத் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும் என்பது மருத்துவ உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். குழந்தைகளுக்கான மருந்துகளைத் தாய்ப்பால், தேனோடு கலந்து கொடுக்கும் வழக்கத்தை நாட்டுப்புறங்களில் காணலாம்.குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் குறைபாடுகள் சளி, இருமல், கக்குவான், உடற்கட்டிகள், மந்தாரம் (சீரணக் கோளாறு) போன்றவையாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலைப் போக்குவதற்குத் தேங்காய் எண்ணெயில் சூடத்தைப்(கற்பூரம்) போட்டுக் காய்ச்சிக் காலில் தேய்ப்பது, மஞ்சளையும் வெள்ளைப் பூண்டையும் சேர்த்துத் தட்டிச் சாறெடுத்து, அதனைச் சூடு செய்து நெற்றியில் தேய்ப்பது போன்ற மருத்துவ முறைகள் கையாளப் படுகின்றன.

குழந்தை தலைகுப்புற விழுந்தாலோ, குழந்தையைத் தலைகீழாகத் தூக்கினாலோ குடல் இடம் மாறிவிடும். இதனைக் குடல் ஏற்றம் என்பர். இதனால் குழந்தைக்கு வயிற்று உளைச்சலும் பேதியும் ஏற்படும். தொடர்ந்து அழுது கொண்டும் இருக்கும். இந்நிலையில் குடல் தட்டுதல் என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும். அதாவது குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்து வயிற்றுப் பகுதியைத் தட்டி விடுவர். அவ்வாறு செய்தவுடன் குடல் சரியாகிவிடும். அழுகையும் நின்றுவிடும்.

மேலும்குழந்தைகளுக்குஉதவும்சிலஇயற்கைமருந்துகளைஅறிந்துகொள்வோமா?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.